கற்பக விநாயகர் பதிகம்

 நல்ல கல்வியும் நயமான பொருள்மிகுச்

செல்வமும் ஒப்பிலா செழிப்பான உயர்வொடு

நல்லறிவும் நற்புகழும் நவிழ்சொல்தான் விளையுந்திறன்

நல்குங்  கற்பக நிலையமர் களிறே . 


தங்கு தடையின்றி தமிழில் கவிசெய்ய

பொங்கு மடைவெள்ளம் பொழியும் மொழியாகி

கங்கு கரைகாணா கருணைக் கடலோனே

இங்கு எமக்காக இளகும் களிறோனே 


அற்புத வளஞ்சேர்க்கும் ஆலர சமர்வோனே

பொற்பதம் தனைகாட்டப் பற்பல வினைதீர

சொற்பதம் தனைப்பாடி சற்குண மடைவேனே

கற்பகக் கணநாதா கற்பதின் கடைநீயே 


நன்மையும் வளந்தரு நலமிகு தொழிலில்

மேன்மையும் பவந்தரு மிகப்பெரும் புகழும்

தன்மையும் தவமொடு தயைமிகுந் தெனக்காய்

நின்னருள் பெறும்பெரு நிலையது தருவாய். 


தடைபல வருமுன் தகர்த்தெனக் கருள்வாய்

விடையமர் பெருமான் விரும்பிடும் நிலைக்கே

இடையிருந் தெனக்காய் இருவினை துணையாய்

கடைத்துணை யெனவே கணபதியே வருவாய். 


திருமிகு இறைவா திருமண மருள்வாய்

முருகனுக் கிறங்கி மணஞ்செய துணையாய்

இருந்தனைக் கிணையாய் இருந்தெனக் கருள்வாய்

கருநிற வடிவே கஜமுக திருவே. 


முன்னம் தமிழ்செய் முதற்கவி தனையே

பின்னம் துதிசெய் பவித்ரனுக் கிறங்கி

நன்றும் நலமும் நவிழ்மொழி நிகழும்

தன்மை அருள்வாய் தமிழதன் தொகையே . 


அற்றம் நீக்கி அறிவென திகழ்வாய்

சுற்றம் காத்து சுகமதும் அருள்வாய்

குற்றம் நீ்க்கி குணமது உயர்வாய்

கற்றோர் போற்றும் கலையதும் அருள்வாய் 


தன்னைக் காக்கும்  தகவினை அருள்வாய்

என்னைச் சேர்ந்தார் எழுந்திடத் துணையாய்

நன்மை சேர்ந்தே நகமொடு தசையாய்

உன்னைச் சேர்ந்தேன் உரியன புரிவாய். 


பிள்ளை நீயே பெருமிறை நீயே

அள்ளி தந்த அருட்கடல் நீயே

வள்ளி கேள்வன் விரும்பிய வேழா

துள்ளி பாடத் துதிக்கரந் தாயேன்


நன்னை நின்றன்  நிஜவடி வன்றோ

உன்னை உன்றன் உருவது கண்ட

பின்னை என்னை பிடித்திடுந் துன்பம்

இன்னும்  இன்னல் இனியது ஆமே 11






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post